முக்கிய செய்திகள்....
இலங்கை தமிழர் பிரச்சினையில் தனது வெளியுறவுக்
கொள்கைக்கு பாதகமில்லாத வகையில்தான்
இந்தியாசெயற்படமுடியும் என்பதை இலங்கை
தமிழ்கட்சிகள் உணரவேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை
செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
தன்னை சந்தித்த இலங்கை தமிழ்க்கட்சி
பிரதிநிதிகளிடம் அவர் இவ்வாறு; தெரிவித்துள்ளார்.
நிருபமா ராவை சந்தித்த தமிழ்கட்சிகளில் ஒன்றான
ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்
குமரகுருபரன் இது குறித்து தெரிவித்தபோது
இறையாண்மை பெற்ற நாடான இலங்கையின் விவகாரத்தில்
தலையிடுவதற்கு இந்தியாவுக்கு இருக்கும் வரையறைகளை
இலங்கை தமிழ்கட்சிகள் உணர்ந்து கொண்டால்தான் இதில்
இருக்கும் பிரச்சினைகளை அந்த கட்சிகள்
புரிந்துகொள்ள முடியும் என்று நிருபமா கூறியதாக
தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு
நடவடிக்கைகளில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை
முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் தீர்வு காணப்பட
வேண்டும் என்று தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்
நிருபமா ராவை வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில்
இந்தியா தொடர்ந்தும் காலம் தாழ்த்தினால், இலங்கை
தமிழர்கள் மத்தியில் இந்தியா மீதான கசப்புணர்வு
அதிகரிக்கவே அது வழிசெய்யும் என்று நிருபமா ராவிடம்
தாங்கள் கூறியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பைச்
சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்
பிரேமசந்திரன்; தெரிவித்தார்.
;
எனது பதவிக் காலத்தை
நீடித்துக் கொள்ளுவதற்காக அரசியல் யாப்பு
திருத்தத்தை முன்வைக்கவில்லை என்று ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகள் வகித்த
காரணத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில்
போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை இந்த
யாப்பு திருத்தத்தில் நீக்கப்படுவதாகவும் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுப்பாட்டை நீக்கினாலும் ஜனாதிபதி
தேர்தலில் போட்டியிடும் அபேட்சகரை கட்சி தான்
தெரிவு செய்யும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிகரமான 59வது
வருடாந்த தேசிய மாநாடு அலரி மாளிகையில் நேற்று
நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதம அதிதியாகக்
கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு
தெரிவித்தார்
;
கற்றறிந்த பாடங்கள்,
நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் செப்டெம்பர்
மாத அமர்வு இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது.
பாரம்பரிய கைத்தொழில், சிறு கைத்தொழில் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு
ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கின்றார்.
ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா
தலைமையில் கொழும்பு 7, ஹோட்டன் பிளேசிலுள்ள
லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெறும்
விசாரணையில் இன்று மாலை 4 மணிக்கு எம். ஐ. எம்.
மொஹிதீன் சாட்சியமளிக்கின்றார்.
இதேவேளை எதிர்வரும் 17ஆம், 18ஆம் திகதிகளில்
ஆணைக்குழுவின் விசாரணை கிளிநொச்சியில் நடைபெற
ஏற்பாடாகி உள்ளது. பொதுமக்கள் சாட்சிய
மளிப்பதற்கான ஏற்பாடுகளை கிளி நொச்சி மாவட்ட
அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்
மேற்கொண்டுள்ளார்.
மாவட்டச் செயலகத்திலும் பிரதேச செயலகங்களிலும்
பொதுமக்கள் சாட்சியமளிக்க ஏற்பாடுகளை
மேற்கொண்டுள்ளதாக அரச அதிபர்
தெரிவித்தார்
புனர்வாழ்வளிக்கப்பட்ட 508
முன்னாள் புலி உறுப்பினர்கள் நாளை தமது பெற்றோர்
மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு
அமைச்சு தெரிவித்துள்ளது
இதன் போது தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்த 180
முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களும்
உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.
பல்வேறு புனர்வாழ்வு முகாம்களில்
புனர்வாழ்வளிக்கப்பட்ட வயது குறைந்தோர், தாய்மார்,
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியோர் மற்றும்
அங்கவீனமுற்றோரே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளதாக
அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதிஷ்குமார்
கூறினார்.
இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை
மறுசீரமைப்பு அமைச்சர் டி. யூ. குணசேகர, பிரதி
அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா, அமைச்சின் செயலாளர் ஏ.
திசாநாயக்க, அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எம். எல்.
சதிஷ்குமார், புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர்
சுனந்த ரணசிங்க ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதன் போது புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி
உறுப்பினர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட
உள்ளன. இதுவரை சுமார் 3 ஆயிரம் முன்னாள் புலி
உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு
விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவுக்கு
சட்டவிரோதமான முறையில் இலங்கையர்கள் வருகின்றமைக்கு
உதவி, ஒத்தாசை வழங்கினார் என்கிற வழக்கில்
குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கும் புலம்பெயர்
தமிழர் ஒருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் தண்டனை
வழங்க உள்ளது.
சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள பெண்டில் ஹில்
என்கிற இடத்தில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழரான
பத்மேந்திரா புலேந்திரன்(வயது 36) என்கிற இளைஞனே
இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம்
வருகின்றமைக்கு உதவி ஒத்தாசை வழங்கி இருந்தார்
என்பதை சிட்னி டவுணிங் சென்ரர் மாவட்ட நீதிமன்றில்;
ஒப்புக் கொண்டார்.
இவர் நீதிபதி; முன்னிலையில் சாட்சியம் வழங்கினார்.
20 இலங்கையர்கள் கடந்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம்
திகதி அவுஸ்தி;ரேலியா வருவதற்கு ஏற்பாடு செய்து
கொடுத்தார் என்று இச்சாட்சியத்தில் ஒப்புக்
கொண்டார்.
இவர் இலங்கை அகதிகளின் உறவினர்களிடம் இருந்து
அவுஸ்திரேலியாவில் 4000 அமெரிக்க டொலர் வரை
இலஞ்சமாகப் பெற்றிருந்தமையை முதல் தடவையாக
நீதிமன்றில் ஒப்புக் கொண்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கத்துக்கு மில்லியன் கணக்கான டொலரை உதவியாக
வழங்கினார் என்று குற்றஞ்சாட்டி அமெரிக்காவின்
பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரும், கோடீஸ்வர
வர்த்தகருமான புலம்பெயர் தமிழர் இராஜ்
இராஜரட்ணத்துக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம்
ஒன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவரது தந்தை ஜேசுதாஸன் இராஜரட்ணமும் இவ்வழக்கின்
எதிரிகளில் ஒருவராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால்
பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிவித்து 24 தமிழர்கள்
இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்
அமைப்புக்களில் ஒன்றான தமிழர் புனர்வாழ்வுக்
கழகத்துக்கு இராஜ் இராஜரட்ணம் இப்பெருந்தொகையை
நிதியை வழங்கி இருக்கின்றார் என்றும் குறிப்பாக
சுனாமி நிவாரண நிதியம் என்கிற பெயரில் புலிகளுக்கு
2 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கி உள்ளார் என்றும்
இவரும், இவரது குடும்பத்தினரும் புலிகள்
அமைப்புக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுத்து
வந்துள்ளார்கள் என்றும் வழக்காளிகள் மன்றுக்கு
தெரிவித்துள்ளார்கள். இவ்வழக்கைத் தொடர்ந்து
விசாரிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது
இந்தியச் செய்திகள்
திருச்சியில் நாவல்பட்டு,
அண்ணா நகர் ஆகிய இடங்களில் தந்தை பெரியார் சிலை
உடைக்கப்பட்டுள்ளது. நெல்லையில் பெரியார்
சமத்துவபுரத்திலும் பெரியார் சிலை
சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.
திருச்சி அண்ணா நகரில் இருந்த பெரியார் சிலையின்
சில பகுதிகள் உடைக்கப்பட்டுள்ளது. இதேபோல்
நாவல்பட்டு என்ற இடத்திலும் பெரியார் சிலை
சேதப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லையில் சமத்துவபுரத்தில் இருந்த பெரியார் சிலை
உடைக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து சாலைக்கு
வந்த சிலர் பேருந்துகள் மீது கல்லெறிந்துள்ளனர்.
இதனால் பதற்றம் நிலவுவதாக செய்திகள்
தெரிவிக்கின்றன.
அயோத்தியில் உள்ள
ராமஜென்மபூமி இடம் யாருக்கு சொந்தம்? என்பது
தொடர்பான வழக்கில் வருகிற 17 ஆம் தேதி அலகாபாத்
உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
இந்த தீர்ப்பு, மத ரீதியிலான மோதல்களை உண்டாக்கலாம்
என்ற அச்சத்தில் தீர்ப்புக்கு முன்னதாகவே
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உத்தரபிரதேச மாநில
அரசு மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு அம்சமாக உத்தரபிரதேசத்திற்கு 400 கம்பெனி
மத்திய காவல் படைகளை அனுப்பி வைக்குமாறு
முதலமைச்சர் மாயாவதி, மத்திய உள்துறை
அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, மாநில ஆளுநர் பி.எல்.ஜோஷியையும் அவர்
சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் சிறைகளில்
அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 100 பேரை
அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது.
பாகிஸ்தான் கடல் எல்லையில் மீன் பிடித்த 442
இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டு
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் தண்டனை காலம் முடிந்த 100 பேர் இன்று
விடுதலை செய்யப்பட்டார்கள்.
இதேப்போல் தண்டனை முடிவடைந்த மீனவர்கள் 2
குழுக்களாக முறையே இம்மாதம் 4 மற்றும் 6 ஆம்
தேதிகளில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று
பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில்
உள்ள காஷ்மீரின் கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில்
சீன நாட்டு படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியான
செய்திகளை மறுத்துள்ளது சீனா.
மேலும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடமாட்டோம்
என்றும் அது தெரிவித்துள்ளது.
கில்ஜித் பகுதியில் சீன படைகள்
குவிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள்
சீனா-பாகிஸ்தான், சீனா-இந்தியா இடையேயான நல்லுறவை
சீர்குலைக்கும் திட்டத்தில் வெளியிடப்படுபவை என
அந்த நாடு கண்டனம் தெரிவித்துள்ளது.
;
உலகச் செய்திகள்
பலஸ்தீனத்துக்கும்
இஸ்ரேலுக்கும் இடையிலான இன்னொரு சுற்று நேரடி
சமாதானப் பேச்சுவார்த்தைகள் நேற்று வாஷிங்டனில்
ஆரம்பமாகியுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகள் இரு தரப்புக்கும் நன்மை
பயக்கும் வகையில் அமையும் என்று அமெரிக்க ஜனாதிபதி
பராக் ஒபாமா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க அமெரிக்கா வந்துள்ள
இஸ்ரேல் பிரதமர்,பலஸ்தீன் ஜனாதிபதி,ஜோர்தான் மன்னர்
மற்றும் எகிப்திய ஜனாதிபதி ஆகியோருக்கு
விருந்துபசாரமளித்து கௌரவிக்கும் வைபவத்தில் பேசும்
போதே ஒபாமா இவ்வாறு நம்பிக்கைத் தெரிவித்தார்





